திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.23 திருமறைக்காடு (வேதாரண்யம்) - திருத்தாண்டகம்
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
1
கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
    காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும ஞான விளக்குக் கண்டாய்
    மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
    பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
2
சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
    திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
    நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
    தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
3
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
    காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
    புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமுடிமேற் சூடி கண்டாய்
    வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
4
மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
5
ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
    அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
    குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
    நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
6
வேலைச்சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
    விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
    அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
    பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
7
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
    அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கு மிறைவன் கணடாய்
    என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
    வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
8
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
    முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
    ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
    பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
9
அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
    ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
    சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
    பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com